நட்பு

நட்பு

ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக்

சிரித்து சிலாகித்து செல்ல மட்டுமல்ல நட்பு..
சிந்திக்கவும் தூண்ட வேண்டும் நட்பு..

துயரத்தில் ஆறுதல் அளிக்க வேண்டும் நட்பு..
வாழ்க்கையை தூக்கி நிறுத்தவும் வேண்டும் நட்பு..

வெறும் வார்த்தைகளின் கோர்வையல்ல நட்பு..
நம் வாழ்கையோடு பிணைய வேண்டும் நட்பு..

நட்பென்று அன்னிய ஆடவரும் பெண்டிரும் தனித்திருக்காதீர்..
நட்பென்ற போர்வையில்தான் ஷைத்தானும் உடனிருப்பான் மறவாதீர்..

நண்பர்களோடு அளவாய் நேசம் கொள்ளுங்கள்..
பகைவர்களோடும் அளவாய் பகைமை பாராட்டுங்கள்..
நண்பரும் பகைவராய் மாறிடலாம்.. சில நேரம்..
பகைவரும்; நண்பராய் சேர்ந்திடலாம்..

நல்ல நட்பிற்கு உதாரணம் அத்தர் வியாபாரி போன்றது..
அதன் வாசனை நம்மீது பரவுமே..
தீய நட்பிற்கு உதாரணம் கொல்லற் பட்டறை போன்றது..
அங்குள்ள நெருப்பும் நாற்றமும் நம்மீது படருமே..

நட்பை பகுத்தறிந்து தேர்ந்தெடுக்க வேண்டுமே..
நட்பினால் குணங்கள் நமக்குள் ஊடுறுவுமே..

வரலாற்றுச் சிறப்புமிக்க நட்பை நீங்கள் அறிந்திடுங்கள்..
இதுபோல் நட்பை பேணி நன்மக்களாய் வாழ்ந்திடுங்கள்;..

நபிகளார் இறைச்செய்தி முதலில் பிரகடனம் செய்தபோது..
நொடிப்பொழுதும் தாமதிக்காமல் சான்று பகர்ந்த நட்பு..

மக்கத்து குரைஷிகள் நபிகளாரை தாக்கியபோது..
தடுத்து தன்னை கேடயமாக்கி நின்ற நட்பு..

நபிகளார் மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்றபோது..
இறைவன் அனுமதியோடு சேர்ந்து சென்ற நட்பு..

தவ்ர் என்னும் குகையிலே தஞ்சமடைந்த போது.
இருவரில் ஒருவராய் இருந்த நட்பு..

உற்ற நண்பராய் அறிவிப்பதென்றால் இவரை அறிவிப்பேன்..
நபிகளார் இவ்வாறு சிலாகித்து கூறிய நட்பு..

குன்றின் மேலிட்ட விளக்காய்..
என்றும் ஒளிர்ந்து கொண்டிருக்கும் நட்பு..

நபி பெருமானாருக்கும்  அபூபக்கர்(ரலி)க்கும்..
நடுவே பிணைந்திருந்த சகோதர நட்பு..
செதுக்கிடுங்கள் இச்சிறப்பினை சிந்தனையிலே..
செம்மையாய் நுழைத்திடுங்கள் நும் சிந்தையிலே..

மார்க்கம் காட்டிய நட்பின் இலக்கணத்தை அறிந்திடுவோம்..
நன்மக்களை அறிந்து நட்பு கொண்டிடுவோம்..
இறைவனுக்காக மட்டுமே அவர்களை நேசம் கொள்வோம்..
மறுமையில் அர்ஷின் நிழலிலே நாம் தங்கிடுவோம்..

2 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *