எது வெற்றி?

எது வெற்றி?      
ஆக்கம்: கு. முஹம்மது ஜபருல்லாஹ், யான்பு, சவூதி அரேபியா. 

1. ஒன்று முதல் ஐந்து வரை தமிழ் கற்க பள்ளியினில்
  சென்று நிதம் அகரமுன் சேரப்பதற்கு மெய்யெழுத்தும்
  நன்று கற்றுத் தேர்ந்து பின் நன் மதிப்பெண் பலவும் பெற்று
  வென்று வந்தேன் முதல்வனாக வியன்தகு கையெழுத்தால்!

2 என தன்னை சொல்லவில்லை எங்ஙனம் கற்பதென்று
  உனதிஷ்டம் போல் என்பாள் ஒருபோதும் என்னைக்கடியாள்
  மனதிற்குள் வாழ்த்துவதும் மறையோதி வேண்டுவதும்
  தனதுமகன் சான்றோனாய் தான்வளர மகிழ்திருப்பாள்!

3 அறிவியலா புவியியலா ஆற்றல் மிகு உளவியலா
  செறிவான உடலியலா சீர்பெற்ற இயல்பியலா – நன்கு
  புரிகின்ற வேதியலா ஏதும்புரியாத தத்துவமா
  சரி கண்டு பகுத்துணர்ந்து சார்ந்துவிட்டேன் பொறியியலை!

4 பொறியியலில் வேதியலை புகுத்திவிட்ட பாடத்திட்டம்
  விரிவுரையும் தெளிவுரையும் விளக்குகின்ற சோதனைகள்
  தெரிந்து தேர்ந்து என் வகுப்பில் தெரியாத பலருக்கும்
  வரிந்து கொண்டு படிப்பித்தேன் வருசையாய் சாதனைகள்!

5 ஆண்டுகள் ஐந்ததனை அண்ணாமலையில் கழித்து விட்டு
  மாண்ட என் தந்தையின் மனத்துயரம் தேற்றிவிட்டு
  பூண்ட வைராக்கியத்தால் பொலிவோடு தேர்வெழுதி
  தாண்டி அக்கரை சேர்ந்தேன் தனிமகனாய் ஒளிபெற்று!

6 சென்னையின் இந்தியத் தொழிநுட்பக்கழகத்தில்
  என்னையும் இணைத்திடவே இருமடங்காய் உழைத்து
  கண்னை இமைமூடா கடிய பலநாட்கள் சென்று
  பொண்னைப் பெற்றது போல் பூரித்தேன் வெற்றிபெற்று!

7 வண்ணப்பூக்களுடன் வனப்புமிகு புள்ளிமானும்
  கண்னைப் பறித்திடும் கானகத்தின் மத்தியிலே
  சென்னையில் தான் உள்ளோமோ சீர்கொண்ட முதுமலையோ
  தன்னை மறக்கடிக்கும் தன் பெயர்தான் கிண்டிகாடோ!

8 துடிப்போடு ஆய்வு செய்து துகளியலின்(*) தேர்வு பெற்று
  படிப்போடு ஆர்வமுடன் பலபாடல்களும் கவியும் கற்று
  நடிப்போடு நாடகங்கள் நல்ல சொல் அலங்காரங்கள்
  வடிப்பதுவும் என்செயலே வாழ்த்துகிறேன் அன்பர்களை!

9 அரேபிய பணிசெய்ய அன்று நான் எண்ணவில்லை
  குறைகண்ட ஒருசிலரை குறிப்பாக ஒதுக்கிவிட்டு
  பறை சாற்றும் புணிதமண்ணில் கால் பதிக்க நன் நாளில்
  மறை காக்கும் இறையோனை மனத்திலாக்கி புறப்பட்டேன்!

10 ஓராண்டோ ஈராண்டோ ஒருவாறு கழித்து விட்டு
  வாராமல் போவேனோ வளமான என் நாட்டிற்கு -உனை
  பாராமல் இருப்பேனோ பரிதவிக்கும் எனதன்னை -மறுத்து
  கூறாமல் துயரத்தில் குடிகொண்டாள் – என் செய்வேன்?

11 பருவங்கள் மாறினவே பனி, வெயில்,சுழற்காற்று
  வருடங்கள் ஒடினவே வனப்பும் மிக குறைந்த கூற்று
  உருவமும் மங்கினவே ஒடியாட முடிவதில்லை -இனி
  தருணத்தை எதிர்நோக்கி தங்குகிறேன் – விடியவில்லை!

12 முப்பத்து மூன்றாண்டு முழு வெளிப்பாலைதனின்
  வெப்பத்தில் தோய்ந்து பின் வெண்சாமரமும் வீச
  ஒப்பற்ற எண்னைவள உற்பத்தி நிறுவனத்தில் -ஆகாய
  கப்பலிலே பயணித்த கதைகள் பல சொல்வேனோ?

13 “போதும்” என்ற மனமே பொண் செய்யும் மருந்தென்பார்
  போதாது போதாது ” புலம்புவதோ சாத்தனென்பார்
  வாதம் செய்வார் சிலர் வழியேதும் காணாமல் – பண
  நாதத்தால் கட்டுண்டு நடந்திடுவார் பிற்போக்காய்!

14 பொருள் வேண்டும் இவ்வுலகின் பொலிவான வாழ்விற்கு
  அருள் வேண்டும் அவ்வுலகின் அழியாத பேற்றிற்கு
  பொருள் கொண்டு வாங்கவிலா பெருவாழ்வு சுவனத்தை – நின்
  அருள் கொண்டு வேண்டுகிறேன் ஆற்றல் மிகு இறையோனே!

15 வெற்றிமேல் வெற்றிதனை இவ்வுலகில் பெற்றிடினும்
  சுற்றியிருப்போரும் சூழலுமே புகழ்ந்திடினும் – இங்கு
  பெற்ற வெற்றியினால் பெரிதாக ஒன்றும் மில்லை – அங்கு
  உற்ற துணையாய் நின்று உயிர்காக்கும் மறுமை வெற்றி!

(*) – துகளியல் – Particle Technology – It is my specialization in MTech.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *