ஊழல், கருப்புப் பணத்துக்கு எதிரான பாஜக தலைவர் அத்வானியின் ரத யாத்திரை இன்று பிகாரில் தொடங்கியது.
இதற்காக ஒரு பஸ் ரதம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரபல வாகன டிசைனரான திலீப் சாப்ரியா தான் இந்த ரதத்தை உருவாக்கியுள்ளார். புனேவில் உள்ள அவரது தொழிற்சாலையில் இந்த ரதம் உருவாக்கப் பட்டது.
ஜன் சேத்னா ரத் யாத்ரா என்ற பெயரிலான இந்த யாத்திரை 38 நாட்கள் நடக்கவுள்ளது. கிட்டத்தட்ட 12,000 கி.மீ. தூரம் அத்வானி பயணம் செய்யவுள்ளார். தினந்தோறும் சுமார் 300 கி.மீ. தூரம் பயணம் செய்யவுள்ள அத்வானி, 23 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் யாத்திரை மேற்கொள்கிறார்.
பிகாரின் சிதாப்தியாரா என்ற இடத்திலிருந்து அத்வானியின் யாத்திரை தொடங்கியது. இது ஷலிசவாதியான ஜெயப்பிரகாஷ் நாராயண் பிறந்த இடமாகும். அத்வானியின் ரத யாத்திரையைத் பிகார் முதல்வர் நிதீஷ்குமார் தொடங்கி வைத்தார்.
முன்னதாக அத்வானி தனது மகள் பிரதிபாவுடன் ஹெலிகாப்டரில் சிதாப்தியாரா வந்தார். பின்னர் யப்பிரகாஷ் நாராயண் வாழ்ந்த வீட்டுக்கு சென்ற அத்வானி அங்குள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்தார்.
இதையடுத்து ரத யாத்திரையை முதல்வர் நிதிஷ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அத்வானியின் ரத யாத்திரை 6 கட்டங்களாக நடக்கிறது. தினமும் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை அவர் ரத யாத்திரை மேற்கொள்கிறார். மொத்தம் 100 மாவட்டங்கள் வழியாக அவர் செல்கிறார்.