|
(தமிழ் முஸ்லிம்களிடம் இத் தொழுகைகள் பற்றி நிறைய
சந்தேகங்கள் உள்ளன அவற்றை அலசுகிறது இந்தக் கட்டுரை)
நபி(ஸல்) அவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்தும் -
விரும்பியும் தொழுத தொழுகை வித்ருத் தொழுகை ஆனாலும்
இது கடமையான தொழுகையல்ல.
உங்களின் கடமையான தொழுகைப் போன்று வித்ருத் தொழுகை
கடைமையானதல்ல எனினும் நபி(ஸல்) இதை
சுன்னத்தாக்கியுள்ளார்கள். 'அல்லாஹ் ஒற்றையானவன். அவன்
ஒற்றையை விரும்புகிறான் குர்ஆனையுடையவரடகளே! வித்ருத்
தொழுங்கள்' என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (அலி -
இப்னுஉமர்- இப்னு அப்பாஸ் (ரலி - ம்) ஆகியோர்
அறிவிக்கும் இச்செய்தி திர்மிதி 415, இப்னுமாஜா,
அஹ்மத் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது)
வித்ருத் தொழுகையின் நேரம்
1) உறங்குவதற்கு முன் வித்ரு தொழுதுவிடுமாறு எனக்கு
நபி(ஸல்) கட்டளையிட்டார்கள் என்று அபூஹூரைரா(ரலி)
அறிவிக்கிறார்கள். (திர்மிதி 417)
2) இரவுத் தொழுகையின் கடைசியாக வித்ரை ஆக்கிக்
கொள்ளுங்கள் என்பது நபிமொழி (இப்னு உமர்(ரலி) புகாரி
998)
3) சுப்ஹூக்கு முன் வித்ரை தொழுங்கள் பஜ்ர் நேரம்
வந்து விட்டால் இரவுத் தொழுகை - வித்ரு முடிவடைந்து
விடுகின்றன என்பது நபிமொழி (அபூஸயீத்(ரலி) திர்மிதி
431)
இந்த மூன்று ஹதீஸில் முதல் ஹதீஸூடன் மற்ற ஹதீஸ்கள்
முரண்படுவதுபோல் தெரிகின்றன. முதல் ஹதீஸ் தூங்குமுன்
வித்ரு தொழுது விட வேண்டும் என்கிறது. மற்றவை இரவின்
கடைசிப் பகுதியில் வித்ரு தொழ வேண்டும் என்கின்றன.
இந்த முரண்பாட்டை கலையும் விதமாகவும் மேலதிக
விளக்கமாகவும் மற்றொரு ஹதீஸ் கிடைக்கின்றது.
உங்களில் எவரேனும் இரவின் இறுதிப் பகுதியில் விழிக்க
முடியாது என்று அஞ்சினால் அவர் வித்ரு தொழுது விட்டு
தூங்கட்டும். இரவில் எழலாம் என்று யாருக்கு நம்பிக்கை
இருக்கிறதோ அவர் இரவின் கடைசியில் வித்ரை தொழட்டும்
ஏனெனில் இரவின் இறுதிப் பகுதியில் குர்ஆன் ஓதும் போது
மலக்குகள் அங்கு வருகிறார்கள் இதுவே சிறந்ததாகும்
என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (ஜாபிர் (ரலி)
திர்மிதி 418, புகாரி முஸ்லிம்)
நபி(ஸல்) இரவின் முற்பகுதியிலும், நடுப்பகுதியிலும்,
இரவின் கடைசிப் பகுதியிலும் வித்ரு தொழுவார்கள்
மரணத்தை நெருங்கிய காலத்தில் அவர்களின் வித்ரு தொழுகை
ஸஹர் நேரம் வரை சென்றது என ஆய்ஷா(ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் - திர்மிதி 419)
இந்த ஹதீஸ்களிலிருந்து வித்ரு தொழுகையின் நேரத்தை
அறிந்துக் கொள்ளலாம்.
இனி பலதரப்பட்ட தொழுகை என்று மக்கள் எண்ணிக்
கொண்டிருக்கும் தொழுகைகளைப் பார்த்து விட்டு வித்ரைத்
தொடர்வோம்.
1) ஸலாத்துல் லைல் 2) கியாமுல்லைல் 3) தஹஜ்ஜத்து 4)
தராவீஹ் 5) வித்ரு
இப்படி ஐந்து வித தொழுகைகளை மக்கள் விளங்கி
வைத்துள்ளனர். இந்த தொழுகைகளையும் அதன்
எண்ணிக்கைகளையும் புரிந்துக் கொள்வதில் அவர்களுக்கு
ஏகப்பட்ட குழப்பம். அறிஞர்களின் தடுமாற்றம் இவர்களின்
குழப்பத்தை மேலும் தீவிரப்படுத்தி விடுகின்றது.
ஐந்துப் பெயர்களால் அழைக்கப்படும் இந்த தொழுகைகளை
ஐந்து விதமான தொழுகை என்று மக்கள் விளங்கி
வைத்துள்ளார்கள். இது உண்மையா என்றால் நிச்சயமாக
இல்லை.
நபி(ஸல்) அவர்களின் தொழுகைகள் பற்றிய ஹதீஸ்ககளை ஆய்வு
செய்யும் எவரும் இவைகள் ஐந்துவித தொழுகைகள் அல்ல.
மாறாக ஒரே தொழுகைக்கு சூட்டப்பட்டுள்ள ஐந்துப்
பெயர்கள் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி விளங்கிக்
கொள்வார்கள்.
இது இந்தத் தொழுகை! இது இந்தத் தொழுகை!! என்று
நபி(ஸல்) பெயர் சூட்டி இரவில் எந்தத் தொழுகையையும்
தொழவில்லை அவர்களின் வழமையான தொழுகைகளும் அதன்
எண்ணிக்கைகளும் ஒரே விதமாக இருந்தன. அதை மக்களுக்கு
விளக்க வந்தவர்கள் தான் ஒரே தொழுகையை பல பெயர்களால்
அறிமுகப்படுத்தி விட்டனர்.
இரவில் தொழுவதால் 'ஸலாத்துல் லைல்' இரவுத் தொழுகை
என்றும், இரவில் நின்று வணங்குவதற்கு
ஆர்வமூட்டப்பட்டதால் 'கியாமுல் லைல்' என்றும்,
குர்ஆனில் 'தஹஜ்ஜத்' என்று குறிப்பிடப்பட்டிருப்பதால்
'தஹஜ்ஜத்' என்றும் அந்த தொழுகை ஒற்றைப்படையில்
முடிவதால் 'வித்ரு' என்றும் அந்த தொழுகைக்கு
பெயர்வந்தது.
தொழுகை ஒன்றுதான் அந்த தொழுகையின் தன்மையையும்
நேரத்தையும் கருத்தில் எடுத்துக் கொண்டவர்கள் பல
பெயர்களை அந்த தொழுகைக்கு சூட்டி விட்டனர்.
தராவீஹ் என்ற பெயரிலோ அல்லது அப்படி புரிந்துக்
கொள்ளும் விதத்திலோ நபி(ஸல்) அவர்கள் காலத்தில் எந்த
ஒரு தொழுகையும் தொழப்படவில்லை. மற்ற வார்த்தைகளாவது
ஹதீஸ்களில் கிடைக்கின்றன. தராவீஹ் என்ற வார்த்தை எந்த
ஒரு ஹதீஸிலும் வரவே இல்லை.
''நபி(ஸல்) இந்த தொழுகைகளை பெயர் குறிப்பிட்டு
தொழுததில்லை என்று கூறுகிறீர்களே... ஆனால் வித்ரு
என்று ஏராளமான ஹதீஸ்களில் பெயர் வருகிறதே..'' என்று
யாருக்காவது சந்தேகம் வரலாம்.
'வித்ரு' என்ற வார்த்தையை மொழிப் பெயர்க்காமல்
விட்டுவிடுவதால் தான் இந்த சந்தேகம் வருகிறது.
'உங்கள் இரவுத் தொழுகையில் கடைசியாக வித்ரை
ஆக்குங்கள்' என்பது ஹதீஸ். ஹதீஸ் வாசகங்கள்
எல்லாவற்றையும் மொழி பெயர்க்கும் நாம் 'வித்ரு' என்பதை
அப்படியே விட்டுவிடுகிறோம். அதனால் அது தனி தொழுகைப்
போன்று தெரிகிறது. வித்ரை மொழிப் பெயர்க்கும் போது
இந்த குழப்பங்கள் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்து
விடும்.
'வித்ரு' என்ற வார்த்தைக்கு 'ஒற்றை' அல்லது
'ஒற்றைப்படை' என்று பொருள்.
உங்கள் இரவுத் தொழுகையில் கடைசியை
ஒற்றைப்படையிலாக்குங்கள் என்று மொழி பெயர்க்கும் போது
தெளிவான விளக்கம் கிடைத்து விடுகிறது.
எந்த ஹதீஸ் நூல்களை எடுத்துக் காட்டி அறிஞர்கள்
தஹஜ்ஜத் தொழுகைத் தனி - வித்ருத் தொழுகைத் தனி,
ஸலாத்துல் லைல் தனி என்று கூறுகிறார்களோ அதே ஹதீஸ்
நூல்களில் அந்தந்த தலைப்பிற்கு கீழ் ஒரே ஹதீஸ்
வார்த்தை மாறாமல் இடம் பெற்றிருப்பதை ஊன்றி கவனிக்க
வேண்டும். வெறும் தலைப்புகளை மட்டும் பார்த்து
சட்டங்களை வகுத்துவிடக் கூடாது. அந்தந்த தலைப்பிற்கு
கீழுள்ள ஹதீஸ்களின் வார்த்தைகளைப் பார்த்து
அதிலிருந்துதான் சட்டங்களை வகுக்க வேண்டும். அப்படி
ஆய்வு செய்பவர்களுக்கு இது தனி தனி தொழுகை என்ற
குழப்பம் ஏற்படவே செய்யாது.
எண்ணிக்கைகள்.
13 ரக்அத்கள்
நபி(ஸல்) பதிமூன்று ரக்அத் வித்ரு தொழுவார்கள்.
அவர்கள் முதுமையடைந்ததும் ஏழு ரக்அத் வித்ரு
தொழுதுள்ளார்கள். (ஆய்ஷா - உம்மு ஸலமா (ரலி -ம்) நஸயி
- திர்மிதி 420)
நபி (ஸல்) அதிகப்படியாக பதிமூன்று ரக்அத்களும்,
குறைவாக
ஒரே சலாமில் ஏழு ரக்அத்களும் தொழுதுள்ளார்கள். இதைவிட
எண்ணிக்கையை அதிகப்படுத்தவோ குறைக்கவோ இல்லை.
நபி(ஸல்) இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள்
ஐந்து ரக்அத்களை ஒற்றைப்படையில் (வித்ராக)
தொழுவார்கள். அவ்வாறு தொழும் போது கடைசி இருப்பைத்
தவிர மற்ற ரக்அத்களில் உட்கார மாட்டார்கள். (அதாவது
நான்கு ரக்அத்களை தொடர்சியாக தொழுது - நடுவில்
உட்கார்ந்து அத்தஹிய்யாத்து ஓதாமல் - ஐந்தாம்
ரக்அத்தில் உட்கார்ந்து ஓதி முடிப்பார்கள்) (ஆய்ஷா -
அபூ அய்யூப் (ரலி - ம்) முஸ்லிம் - திர்மிதி 421
அபூதாவூத்)
11 ரக்அத்கள்.
ரமளானில் நபி(ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை எவ்வாறு
இருந்தது என்று நான் ஆய்ஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன்.
ரமளானிலும் ரமளான் அல்லாத காலங்களிலும் நபியவர்கள்
பதினோரு ரக்அத்களை விட அதிகப்படுத்தியதில்லை. முதலில்
நான்கு ரக்அத்கள் தொழுவார்கள் அதன் அழகையும்
நீளத்தையும் கேட்டுவிடாதே.. (அதாவது அந்த தொழுகை
அவ்வளவு அழகாக இருக்கும்) பின்னர் நான்கு ரக்அத்கள்
தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் பற்றி
கேட்டுவிடாதே... பின்னர் மூன்று ரக்அத்கள்
தொழுவார்கள். (ஆய்ஷா(ரலி) புகாரி அத்தியாயம் தஹஜ்ஜத்
ஹதீஸ் எண் 1147, திர்மிதி 403 அனைத்து ஹதீஸ்
நூல்களிலும் இந்த செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது)
ரமளான் ரமளான் அல்லாத நாட்கள் என்று நபி(ஸல்) எந்த
வித்தியாசமும் செய்யாமல் இரவுத் தொழுகையை 11
ரக்அத்களாகவே நீடித்துள்ளார்கள் என்பதற்கு இந்த ஹதீஸ்
வலுவான சான்றாக உள்ளது
நபியவர்கள் பதினோரு ரக்அத்கள் தொழுபவர்களாக
இருந்தார்கள் அதுவே அவர்களின் இரவுத் தொழுகையாக
இருந்தது. (ஆய்ஷா(ரலி) புகாரி அத்தியாயம் வித்ரு எண்
994)
எனது சிறிய தாயார் மைமுனா அவர்கள் வீட்டில் நான் ஒரு
நாள் தங்கினேன் நான் தலையணையின் பக்கவாட்டில் சாய்ந்து
தூங்கினேன். நபியவர்களும் அவர்களின் மனைவியும்
தலையணையின் சீள வாக்கில் தூங்கினார்கள். இரவின்
பாதிவரை நபியவர்கள் தூங்கினார்கள் பின்னர் விழித்து
தங்கள் கையால் முகத்தை தடவி தூக்க கலக்கத்தை
போக்கிவிட்டு ஆல இம்ரான் அத்தியாயத்தின் இறுதி பத்து
வசனங்களை ஓதி விட்டு எழந்து சென்று தொங்கவிடப்
பட்டிருந்த பழைய தோல் பையிலிருந்து தண்ணீர் சாய்த்து
ஒளு செய்தார்கள். பின்னர் தொழுவதற்காக நின்றார்கள்
நானும் அவர்களின் இடது புறம் போய் நின்றேன் எனது
காதைப் பிடித்து இழுத்து வலது பக்கம் நிறுத்தினார்கள்.
இரண்டு ரக்அத் தொழுதார்கள்,
மேலும் இரண்டு ரக்அத் தொழுதார்கள்,
இன்னும் இரண்டு ரக்அத் தொழுதார்கள்,
மீண்டும் இரண்டு ரக்அத் தொழுதார்கள்,
மறுபடியும் இரண்டு ரக்அத் தொழுதார்கள்,
பின்பு ஒற்றப்படையில் (வித்ரு) தொழுதார்கள். (இப்னு
அப்பாஸ்(ரலி) புகாரி அத்தியாயம் வித்ரு எண் 992, 1198)
9 ரக்அத்துகள்
நபி(ஸல்) ஒன்பது ரக்அத்துகளாக ஒற்றைப்படையில் (வித்ரு)
தொழுவார்கள். எட்டாம் ரக்அத்தில் உட்கார்ந்து எழுந்து
ஒன்பதாம் ரக்அத்தில் சலாம் கொடுப்பார்கள். (இப்னு
உமர்(ரலி) முஸ்லிம் நஸயி அஹ்மத்)
7 ரக்அத்கள்.
நபி(ஸல்) ஏழு ரக்அத் வித்ரு (ஒற்றைப்படையில்)தொழுதால்
ஆறாம் ரக்அத்தில் உட்கார்ந்து எழுந்து ஏழாம்
ரக்அத்தில் ஸலாம் கொடுப்பார்கள். (ஆய்ஷா(ரலி)
அபூதாவூத் - நஸயி - அஹ்மத்)
5 ரக்அத்கள்.
நபியவர்கள் இரவில் 13 ரக்அத்கள் தொழுவார்கள். ஐந்து
ரக்அத்தை ஒற்றைப்படையில்(வித்ராக) தொழுவார்கள் (அப்படி
தொழும்போது) ஐந்தாம் ரக்அத்தில் உட்கார்ந்து ஸலாம்
கொடுப்பார்கள். (ஆய்ஷா(ரலி) புகாரி - முஸ்லிம் -
திர்மிதி 421)
3 ரக்அத்கள்.
நபி(ஸல்) மூன்று ரக்அத்கள் வித்ரு தொழுவார்கள்.
(ஆய்ஷா(ரலி) இப்னு அப்பாஸ் (ரலி) முஸ்லிம், நஸயி,
அஹ்மத், பைஹகி)
கிராஅத்
நபி(ஸல்) ஒற்றப்படைத் தொழுகையின்(வித்ரின்) மூன்று
ரக்அத்தில் முதல் ரக்அத்தில் 'ஸப்பிஹிஸ்ம ரப்பிகல்
அஃலா' என்ற சூராவையும், இரண்டாம் ரக்அத்தில் 'குல்யா
அய்யுஹல் காபிரூன்' என்ற அத்தியாயத்தையும், மூன்றாம்
ரக்அத்தில் 'குல்ஹீவல்லாஹூ அஹத்' என்ற
அத்தியாயத்தையும் ஓதுவார்கள் என உபை பின் கஃபு(ரலி)
அறிவிக்கிறார்கள். திர்மிதி 424, அஹ்மத், நஸயி,
இப்னுமாஜா)
நபி(ஸல்) மூன்று ரக்அத் வித்ரு தொழுதால் ஒவ்வொரு
ரக்அத்திலும் மூன்று அத்தியாயங்கள் விதம் ஒன்பது
அத்தியாயங்களை ஓதுவார்கள் கடைசி அத்தியாயாத்தில்
குல்ஹூவல்லாஹூ அஹத் சூராவை ஓதுவார்கள் என்று
திர்மிதியில் ஒரு செய்தி வருகிறது அலி(ரலி)
அறிவிப்பதாக வரும் இச்செய்தி பலவீனமானதாகும் ஏனெனில்
இதன் அறிவிப்பாளர் தொடரில் அல் ஹாரிஸ் அல் அஃவர்
என்பவர் இடம் பெறுகிறார் அவர் பொய்யராவார் அதனால் இது
ஏற்கத்தக்க ஹதீஸ் அல்ல.
யார் ஐந்து ரக்அத் தொழு விரும்புகிறாரோ அவர் ஐந்து
தொழலாம், யார் மூன்று ரக்அத் தொழ விரும்புகிறாரோ அவர்
மூன்று தொழலாம், யார் ஒரு ரக்அத் தொழ விரும்புகிறாரோ
அவர் ஒன்று தொழலாம் என்பது நபிமொழி (அபூ அய்யூப் அல்
அன்சாரி (ரலி) நஸயி, அபூதாவூத், இப்னுமாஜா)
வித்ரும்
மஃரிபும் வித்தியாசப்பட வேண்டும்
மூன்று ரக்அத் வித்ரு தொழுதால் மஃரிபைப் போன்று வித்ரை
ஆக்கி விடாதீர்கள் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.
(அபூஹூரைரா(ரலி) ஹாக்கிம், தாரகுத்னி, இப்னுஹிப்பான்)
மூன்று ரக்அத் வித்ரு தொழும் போது எவ்வாறு தொழுவது?
மஃரிபைப் போன்று வித்ரை ஆக்காதீர்கள் என்று ஹதீஸ்
வந்துள்ளதால் வித்தியாசப்படுத்தி தொழ வேண்டும்.
முதலில் இரண்டு தொழுது ஸலாம் கொடுத்து பின்னர் ஒன்று
தொழுது சிலர் வித்தியாசப்படுத்துகிறார்கள். இப்னு
உமர்(ரலி) இவ்வாறு தொழுதுள்ளதாகவும் கூறுகிறார்கள்.
இப்னு உமர் அவர்கள் இவ்வாறு தொழுதது உண்மைதான்
(புகாரி991) ஆனால் அவர்கள் தொழுத மூன்று ரக்அத்தையும்
சேர்த்து அவர்கள் வித்ரு என்று சொல்லவில்லை. இரண்டு
ரக்அத் தொழுது ஸலாம் கொடுத்து பிரித்ததன் மூலம் அது
மூன்றாம் ரக்அத்துடன் சேராது என்பதை விளங்கலாம்.
பின்னர் தொழுத ஒரு ரக்அத் மட்டுமே (ஒற்றையாக
இருப்பதால்) வித்ரு தொழுகையாகும்.
ஹனபி மத்ஹப் காரர்கள் போன்று தொழுவதற்கும் ஆதாரம்
எதுவுமில்லை. இரண்டாம் ரக்அத்தில் உட்கார்ந்து
அத்தஹிய்யாத்து ஓதுவதன் மூலம் அவர்கள் வித்ரை மஃரிபு
போன்றே ஆக்கி விடுகிறார்கள். மூன்றாம் ரக்அத்தில்
ருகூவிற்கு பிறகு கைகளை உயர்த்துவதால் மட்டும் அது
மஃரிபிலிருந்து வித்தியாசப்பட்டு விடாது.
மூன்று ரக்அத் தொழும் போது நபி(ஸல்) எவ்வாறு
தொழுதார்களோ அவ்வாறு தொழுவதே சரியாகும்.
நபி(ஸல்) மூன்று ரக்அத்கள் வித்ரு தொழுதால் கடைசி
ரக்அத்தில் தான் உட்காருவார்கள் ஸலாம் கொடுப்பார்கள்
என ஆய்ஷா - உபை பின் கஃபு (ரலி-ம்) அறிவிக்கிறார்கள்.
(நஸயி)
இரண்டு ரக்அத்தில் ஸலாம் கொடுத்து பிரிக்காமல்,
அத்தஹிய்யாத்து ஓதாமல் நேராக எழுந்து மூன்றாம்
ரக்அத்தையும் தொழுது இறுதியில் ஸலாம் கொடுப்பது தான்
நபிவழியாகும். இவ்வாறு செய்வதன் மூலம் வித்ரு தொழுகை
மஃரிபு தொழுகையிலிருந்து வித்தியாசப்பட்டு விடுகிறது.
1 ரக்அத்.
இஷாவிலிருந்து சுப்ஹ் வரை நபி(ஸல்) பதினோரு ரக்அத்கள்
தொழுவார்கள். ஒவ்வொரு இரண்டு ரக்அத் முடிவிலும் ஸலாம்
கொடுப்பார்கள். பின்னர் ஒரு ரக்அத் தொழுவார்கள்.
(ஆய்ஷா(ரலி) முஸ்லிம், அஹ்மத், நஸயி)
நாம் மேலே எடுத்துக் காட்டியுள்ள எண்ணிக்கையை விட
அதிகமான எண்ணிக்கையில் நபி(ஸல்) தொழுதுள்ளார்கள்
என்பதற்கு எந்த ஒரு ஹதீஸூம் இல்லை.
13 ரக்அத்களை விட அதிகமாக தொழவேக் கூடாதா...?
தொழலாம் தடையில்லை ஆனால் நபி(ஸல்) அவ்வாறு தான்
தொழுதுள்ளார்கள் என்று (பொய்) கூறி அந்த கூடுதல்
ரக்அத்களை சுன்னத்தாக்கக் கூடாது.
இரவுத் தொழுகையை எவ்வாறு தொழ வேண்டும் என்று ஒரு
மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி(ஸல்)
அவர்கள் 'இரண்டிரண்டு ரக்அத்களாக தொழு. சுப்ஹ் வந்து
விட்டால் ஒரு ரக்அத் தொழுது முடித்துக் கொள்'
என்றார்கள். (இப்னு உமர்(ரலி) புகாரி, முஸ்லிம்,
திர்மிதி)
எண்ணிக்கையை வரையறுக்காமல் இரண்டிரண்டாக தொழு என்று
நபி(ஸல்) கூறியுள்ளதால் அவரவர் விரும்பும் அளவிற்கு
சுப்ஹ்வரை எத்துனை ரக்அத்களும் தொழலாம். 13 ரக்அத்களை
தாண்டி சிலருக்கு 30 ரக்அத்கள் தொழ விருப்பம்
இருந்தால் தொழலாம். சிலருக்கு அதிகப்படியாக வெறும்
இரண்டு ரக்அத்கள் மட்டும் தொழ விருப்பம் இருந்தால்
அவர்கள் அவ்வாறு செய்யலாம். நாற்பது - ஐம்பது என்று
சுப்ஹ்வரை தொழ ஒருவர் விரும்பினால் கூட அவர் தொழலாம்.
அதற்கு இந்த ஹதீஸ் அனுமதியளிக்கிறது. ஆனால் பதினோரு
ரக்அத்களை தாண்டி இத்துனை ரக்அத்கள் தான் தொழ வேண்டும்
இருபது ரக்அத்கள் தான் தொழ வேண்டும் என்று ரக்அத்களின்
எண்ணிக்கையை வரையறுக்கும் உரிமை அவற்றை
சுன்னத்தாக்கும் உரிமை எவருக்கும் இல்லை. அதிகப்படியாக
தொழும் தொழுகை அவரவரின் தனிப்பட்ட விருப்பத்தை
சார்ந்ததாகும்.
ஜமாஅத்தாக தொழுவது.
ரமளானில் ஏழுநாட்கள் எஞ்சியிருக்கும் வரை(அதாவது 23
நாட்கள்) நபி(ஸல்) எங்களுக்கு தொழுகை நடத்தவில்லை.
24ம் இரவில் மூன்றில் ஒரு பகுதி முடியும் வரை
எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள் அடுத்த நாள் தொழுகை
நடத்தவில்லை 26ம் இரவில் பாதி இரவு கழியும் வரை தொழுகை
நடத்தினார்கள். அடுத்த நாள் தொழுகை நடத்தாமல் 28ம்
நாள் தொழுகை நடத்தினார்கள். தொழுகைக்கு
குடும்பத்தினரையும் - மனைவிகளையும் அழைத்தார்கள். ஸஹர்
செய்தல் தவறி விடுமோ என்று நாங்கள் அஞ்சும் அளவிற்கு
தொழுகையை நீட்டினார்கள். (அடுத்தடுத்த நாள் தொழவில்லை)
என்று ஜூபைர் பின் நுமைர் அறிவிக்கிறார்கள் (திர்மிதி
734)
இதே செய்தி ஆய்ஷா(ரலி) வழியாக புகாரியில் வருகிறது.
மக்கள் திரண்டு தொழுகைக்காக காத்துக் கொண்டிருந்த போது
வெளியில் வராத நபி(ஸல்) அவர்கள் சுப்ஹ் தொழுகைக்கு
வந்து ''நீங்கள் தொழுகைக்காக காத்துக் கொண்டிருந்தது
எனக்கு தெரியும் ஆர்வத்தின் காரணமாக அல்லாஹ் இந்த
தொழுகையை கடமையாக்கி விடுவானோ.. என்று அஞ்சி தான் நான்
வரவில்லை'' என்று சொன்ன செய்தி கிடைக்கிறது. (புகாரி
1129)
நபி(ஸல்) இஷாவிலிருந்து சுப்ஹ் வரை 11 ரக்அத்கள்
தொழுதுள்ளார்கள். தஹஜ்ஜத்தும்; அதுதான், தராவீஹூம்
அதுதான், இரவுத் தொழுகையும் அதுதான், வித்ருத்
தொழுகையும் அதுதான்.
வித்ரில் குனூத்.
வித்ரில் ஓதுவதற்காக எனக்கு நபி(ஸல்) துஆவை கற்றுக்
கொடுத்தார்கள் என ஹஸன்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
اللهّم اهد ني فيمن هديت وعافني فيمن عافيت وتولّني
فيمن توليت وبارك لي فيما أعطيت وقني شرَّ ما قضيت
فإنّك تقضي ولا يقضى عليك وإنه لا يذلُّ من واليت
تباركت ربنا وتعاليت
அல்லாஹூம்மஹ்தினீ ஃபிமன் ஹதைத்த, வ ஆஃபினி ஃபீமன்
ஆஃபைத்த, வதவல்லனி ஃபீமன் தவல்லைத்த, வபாரிக்லி ஃபீமா
அஃதைத்த, வகினீ ஷர்ர மா க்கலைத்த, வஇன்னக்க தக்ளீ வலா
யுக்ளா அலைக்க, வஇன்னஹூ லா யதில்லு மன் வாலைத்த,
தபாரக்த ரப்பனா வதஆலைத்த.
பொருள்: இறைவா நீ யாருக்கு நேர்வழி காட்டினாயோ
அவர்களுடன் எனக்கும் நேர்வழி காட்டுவாயாக! நீ யாருக்கு
துன்பங்களை துடைத்தாயோ அவர்களுடன் எனது துன்பங்களையும்
துடைப்பாயாக! நீ யாருக்கு பொறுப்பேற்றுக் கொண்டாயோ
அவர்களுடன் எனக்கும் பொறுப்பேற்றுக் கொள்வாயாக! நீ
வழங்கியவற்றில் எனக்கு பரக்கத் செய்வாயாக! நீ
விதியாக்கியதின் கெடுதியை விட்டும் என்னை காப்பாயாக!
நிச்சயமாக நீயே விதிப்பவன். உன்மீது எதையும் விதிக்க
முடியாது! நீ யாரை நேசித்து விட்டாயோ அவர் இழிவடைய
மாட்டார். எங்கள் இறைவா! உன் அருள் விசாலமானது உன்
மகத்துவம் மேலானது. (திர்மிதி 429)
இந்த துஆவை இரவுத் தொழுகையின் ஒற்றைப்படை(வித்ரு)
கடைசி ரக்அத்தில் ருகூஃவிற்கு முன்போ - பின்போ அவரவர்
விருப்பப்படி ஓதிக் கொள்ளலாம். இரண்டு நிலையிலும்
நபி(ஸல்) குனூத் ஓதியதற்கு ஆதாரம் கிடைக்கின்றன. (ஹஸன்
- உபை பின் கஃபு(ரலி-ம்) வழியாக ஹாக்கிம் அபூதாவூத்
நஸயி)
நபி(ஸல்) குனூத் ஓதும் சந்தர்பங்களில் கைகளை
உயர்த்தியதற்கு ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. அதே
போன்று குனூத்திற்கு ஆமீன் சொல்வதற்கும் ஆதாரம்
கிடைக்கவில்லை. மக்கா மதீனா போன்ற இடங்களில் கைகளை
உயர்த்தி குனூத் ஓதினாலும் பிறர் அதற்கு ஆமீன்
சொன்னாலும் நமக்கு ஆதாரம் கிடைக்கவில்லை என்பதால் அந்த
சந்தர்பங்களில் நாம் அமைதியாக நின்றுக் கொள்ள வேண்டும்
என்பதே சரியாகப்படுகிறது. (அல்லாஹ் மிக்க அறிந்தவன்)
|