www.tamilmuslim.com

விரும்பியவர்களுக்கு அனுப்ப....     முதல் பக்கம்
 

தேதிக் கோடு சட்ட சிக்கலை உருவாக்குமா...?

ஜி -என்.



நோன்பின் துவக்கத்தை உலகம் முழுவதும் ஒரே நாளில் ஒரே பிறையில் துவக்க முடியாது என்ற கருத்துடையவர்கள் அதில் உலக தேதிக் கோட்டை ஆதாரம் காட்டி இரண்டு கிழமை என்று வாதிக்கிறார்கள். அந்த தேதிக் கோடு பிரச்சனையை உருவாக்குமா.. என்பதை நாம் அறிந்துக் கொள்ள வேண்டும்.

இது பற்றி நாம் ஓரளவு விரிவாக அறிந்துக் கொள்வது நல்லது.

ஒரு நாளுடைய துவக்கம் எது என்பதை சந்திர கணக்கு அடிப்படையில் தெளிவாக சொல்லி விட முடியும். அமவாசைக்கு அடுத்து பிறை பிறந்த அந்த நேரம் முதல் - அதாவது மஃரிபு முதல் - ஒரு நாளின் துவக்கம் ஆரம்பித்து விடுகிறது. சந்திர நாளின் துவக்கத்தை மனிதர்கள் தீர்மானிக்காமல் இறைவனே தீர்மானித்து ஒழுங்கு படுத்தியுள்ளான்.

சூரிய இயக்க அடிப்படையில் ஒரு நாளின் துவக்கம் என்பது எங்கிருந்து துவங்குகிறது...! இதை எவராலும் கண்டுபிடிக்க முடியவே இல்லை. கண்டு பிடிக்கவும் முடியாது. அதனால் சூரிய நாட்களை தீர்மானிப்பதில் உலகில் நீண்ட காலம் பெரும் குழப்பமே நீடித்து வந்தது. கடல் வழி வணிகம், கப்பல் போக்கு வரத்து, தொலை தூரத்து தகவல் பரிமாற்றம் இவைகள் எல்லாம் ஒரு குழப்பமான சூழ்நிலையிலேயே நடந்துக் கொண்டிருந்தன. இதற்கு ஒரு முடிவுகட்டும் முயற்சியில் புவியியல் விஞ்ஞானிகள் இறங்கினர். நீண்ட உழைப்பிற்கு பிறகு மக்களின் வசதிக்கேற்ப நாட்களின் துவக்கத்தை அறிய ஒரு தேதிக் கோட்டை உருவாக்கிக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்தனர்.

எந்தப் பகுதியை தேர்ந்தெடுத்து இந்த கோட்டை உருவாக்குவது என்று சிந்தித்ததில் நாடுகள் நிறைந்துள்ள இடங்கள் இதற்கு தோதுவாக அமையவில்லை ஏனெனில் ஒரு நாட்டின் மீது இந்த கோட்டை வரைந்தால் ஒரு நாட்டுக்குள்ளேயே நாட்களில் வித்தியாசம் ஏற்பட்டு விடும் என்பதால் நாடுகள் இல்லாத கடல் பகுதியை தேர்ந்தெடுத்து அந்த தேதிக் கோட்டை வரைந்து அந்த தேதிக் கோடு இரவு 12 மணியை கடக்கும் போது ஒரு நாளின் துவக்கமாக கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தனர். உலகம் படிப்படியாக அதை ஒப்புக் கொண்டது.

இது நடந்தது 1884

தேதிக் கோட்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் நியுஸிலாந்தையும் - ஹவாய் தீவுகளையும் பிரிக்கும்கடல் பகுதி. எவ்வளவு முயற்சி செய்தும் நாடுகளை கிராஸ் பண்ணாமல் அந்த கோட்டை தீர்மானிக்க முடியாமல் வளைவு நெளிவுகளுடன் தான் அந்த கோட்டை வரைந்தார்கள்.

நியுஸிலாந்து திங்கள் கிழமையில் (இரவு 12 மணிக்கு) நுழையும் போது அலாஸ்கா ஞாயிற்றுக் கிழமை இரவு 12ஐ கடந்திருக்கும். ஆனாலும் இதையும் தெளிவாக வரையறுக்க முடியவில்லை. தேதிக் கோட்டில் ஏற்பட்ட இடையூறுதான் இதற்கு காரணம்.

நியுஸிலாந்து புதிய நாளில் (உதாரணமாக திங்கள் கிழமையில்) நுழைந்து விட்ட பிறகும் கூட அலாஸ்கா பகுதிக்கு சொந்தமான ஹானலுலு தீவுகள் ஞாயிற்றுக் கிழமையிலேயே இருக்கின்றன. தேதிக் கோட்டின் வளைவை கவனித்தால் இது புரியும்.

மேற்கு உலகத்தினர் தங்கள் வசதிக்கேற்ப இப்படியெல்லாம் தீர்மானித்துக் கொண்டனர். இஸ்லாமிய வணக்க வழிப்பாடுகளை தீர்மானிப்பதில் இந்த தேதிக் கோடு எந்த பங்கும் வகிக்காது - வகிக்க தேவையில்லை என்பது ஒரு புறம் உண்மை என்றாலும் தேதிக் கோட்டை கருத்தில் எடுத்துக் கொண்டே நாம் பிரச்சனையை அணுகி ஒரே நாளில் வெள்ளிக் கிழமை வராதா... ஜூம்ஆ தொழ முடியாதா என்பதை பார்ப்போம்.

ஒரு நாளுடைய துவக்கம் என்பது நியுஸிலாந்து பகுதியில் இரவு 12 மணிக்கு துவங்குகிறது என்பதை நாம் ஒப்புக் கொண்டால் அதில் தெளிவான உறுதியைப் பெற்றிருக்க வேண்டும். நாளின் துவக்கம் இங்கிருந்து தான் என்று ஒரு பகுதியை தீர்மானித்து விட்ட பிறகு நாளின் துவக்கத்திற்கு பின்னால் இருக்கும் பகுதிகளைத்தான் (அதாவது நியுஸிலாந்தை தொடர்ந்து வரும் பகுதிகளை தான்) கருத்தில் எடுக்க வேண்டுமே தவிர நாளின் துவக்கத்திற்கு முன்னால் உள்ள பகுதிகளை கருத்தில் எடுக்கக் கூடாது. அப்படி எடுத்தால் நாளின் துவக்கம் என்பது அவசியமில்லாமல் போய் விடும்.

நியுஸிலாந்து தான் புதிய நாளின் துவக்கத்தில் உள்ளே நுழைகிறது என்றால் இந்த நாட்டிற்கு ஒரு நாள் எப்போது முடிகிறது? அடுத்த நாள் இரவு 12 மணிக்கு முடிகிறது. நியுஸிலாந்து இரவு 12 மணிக்கு வெள்ளிக் கிழமையின் உள்ளே நுழைகிறது. அடுத்து அது சனிக்கிழமையின் உள்ளே நுழைய 24 மணி நேரங்களாகும். இந்த 24 மணி நேரத்தில் நியுஸிலாந்தை தொடர்ந்து உலகில் உள்ள ஒவ்வொரு பகுதியும் வெள்ளிக் கிழமையின் உள்ளே கட்டாயம் நுழைந்து விடும். நேரங்கள் தான் வித்தியாசப்படுமே தவிர நாள் வித்தியாசப்படாது.

வெள்ளிக் கிழமை என்ற நாள் துவங்கி முதன் முதலில் நியுஸிலாந்தில் ஜூம்ஆ தொழுத பிறகு அதை தொடர்ந்து மற்ற நாடுகளும் வெள்ளிக் கிழமையை அடைந்து ஜூம்ஆவை நிறைவேற்றும்.

நாளின் துவக்கத்தை அறிய தேதிக் கோட்டை தீர்மானித்து விட்டு நாள் துவக்கத்திற்கு முன்னால் உள்ள நாடுகள் வேறு கிழமைகளில் இருக்கிறதே என்று கேட்பது முறையான வாதமல்ல.

அடுத்து 1884ல் இந்த தேதிக் கோடு உருவாவதற்கு முன்னால் நாட்களை தீர்மானிப்பதில் எப்படி ஒரு குழப்பமான சூழ்நிலை நீடித்ததோ அதே நிலையில் தான் இன்றைய பிறை குழப்பம் உள்ளது. இந்த குழப்பம் தான் உம்முல் குரா காலண்டரில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது. அதன் மீது உலகம் முழுதும் விவாதம் துவங்கியுள்ளது. இந்த விவாதத்தின் முடிவு தேதிக் கோட்டை போன்று ஒரு பிறைக் கோட்டை உருவாக்கினால் (அதாவது முதல் பிறை பிறக்கும் இடத்தில் அந்த கோடு அமைந்து விடும்) அதற்கு அடுத்த காலங்களில் இந்த பிறை குழப்பம் ஒரு முடிவுக்கு வந்து விடும் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.

தேதிக்கோட்டை உடைய நாடு 24 மணி நேரத்திற்கு பிறகு அடுத்த நாளின் உள்ளே நுழையும் என்பது உண்மை என்றால் அதை தொடர்ந்து வரும் நாடுகள் அனைத்தும் 24 மணி நேரத்திற்குள் ஒரு கிழமையின் உள்ளே வந்து விடும்.

அதே போன்று பிறை பிறந்து அதை அறிவிக்கும் நாடு அடுத்த நாளை தொடுவதற்கு முன், இன்னும் சொல்லப் போனால் சுப்ஹ் நேரத்தை அடைந்து வெளியேறு முன் மற்ற நாடுகளும் அந்த பிறையின் உள்ளே வந்து விடும்.

தேதிக்கோடு உருவாவதற்கு முன்னால் உலகத்தின் நிலையையும், இன்றைய பிறை பிரச்சனையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் விளக்கம் புரியும்.

ஒவ்வொரு நாட்டிற்கு ஒரு பிறை ஒவ்வொரு நாட்டிற்கு ஒரு கிழமை என்றால் அது ஏராளமான ஹதீஸ்களுடன் முரண்பட்டு விடும்.

ரபியுல் அவ்வள் பிறை 12ல் நபி(ஸல்) மரணமடைந்தார்கள் என்றால் எந்த பகுதியின் பிறை 12ஐ கணக்கெடுப்பது?

வெள்ளிக் கிழமை உலகம் அழியும் என்று நபிமொழியுள்ளது (முஸ்லிம்) தேதிக் கோட்டிற்கு அந்த பக்கம் வியாழன் - இந்த பக்கம் வெள்ளி என்றால் இந்த பகுதி மட்டும் தான் அழியுமா...?

இப்படி பல கேள்விகள் பிறக்கும். (அல்லாஹ் மிக்க அறிந்தவன்)

 

தமிழ் இஸ்லாமிய செய்தி ஊடகத்தின் உலக வலை