|
பிறை பார்ப்பதில் உள்ள வித்தியாசங்களை எல்லாம் கடந்து
இன்று உலகெங்கும் புனிதமிக்க ரமலான் மாதம் துவங்கி
விட்டது. இந்த மாதத்தில்தான் அகில உலகங்களின் இரட்சகன்
அல்லாஹ் தன்னுடைய படைப்பினங்களுக்கு இம்மாதத்தை தனது
அருட்கொடையாக வழங்கியதன் அர்த்தத்தை உணர்த்துகிறான்.
''என்னுடைய அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம்
கேட்கும்போது சொல்வீராக, நான் உண்மையில் (அவர்களுக்கு)
அருகாமையில் இருக்கின்றேன். என்னை அழைக்கும் ஒவ்வொரு
அடியானது அழைப்பையும் கேட்டு பதிலளிக்கிறேன். (அது
போலவே) அவர்கள் என்னையே அழைத்து மேலும் என்னையே
நம்பும்படியும் சொல்வீராக. அதனால் அவர்கள் நேர்வழியை
அடைவார்கள்' - சூரா அல்-பகரா (186).
இந்த புனிதமிக்க ரமலான் மாதத்தில் நம்முடைய
பிரார்த்தனைகளை அவன் கேட்கவும், அவனது அழைப்பை நாம்
செவியேற்று அவனுக்குரிய கடமைகளை செய்யவும் உறுதி
கொள்வோம்.
'2:183. ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன்
இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல்
உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்)
நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.'
'2:184.(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில
குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால்
(அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது
பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின்
நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்;
எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்)
நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப்
பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு)
உணவளிக்க வேண்டும்;. எனினும் எவரேனும் தாமாகவே
அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும்
நீங்கள் (நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள்
நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை
உணர்வீர்கள்).'
'2:185. ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான்
மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான
சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்)
பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப்
பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ,
அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;. எனினும் எவர்
நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர்
அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும்
நாட்களில் நோற்க வேண்டும்;. அல்லாஹ் உங்களுக்கு
இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன்
நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப்
போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி
காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி
நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம்
நாடுகிறான்).'
மேற்கண்ட அல்-குர்ஆன் வசனங்கள் ரமலானின்
முக்கியத்துவத்தையும் அதில் நோன்பு நோற்பதில் உள்ள
மகத்துவத்தையும் நமக்கு உணர்த்துகின்றன. இந்த ஒரு
மாதத்தில் நாம் நம் ஆத்மாவை சுத்திகரித்துக் கொள்ள
வழங்கப்பட்டுள்ள வாய்ப்பாக கருதி செயல்பட வேண்டுமே
தவிர, இதை காரணம் காட்டி உலக விசயங்களிலிருந்தும் தனது
கடமைகளிலிருந்தும் ஓடி ஒளிந்துக் கொள்வதற்காக அல்ல.
ஒரு குறிப்பிட்ட பொழுதில் உண்பதிலிருந்தும்,
குடிப்பதிலிருந்தும் தவிர்ந்து இருப்பது சுய
ஒழுக்கத்தை கற்பதற்காகத்தான்.
நோன்பானது உடல் வருத்தத்தை உண்டாக்குவதற்காக அல்ல
மாறாக நோன்பாளியின் உள்ளத்தை வலுப்படுத்தி உயர்ந்த
செயல்களின்பால் உயர்த்துவதற்காகத்தான். விஞ்ஞானிகள்
கூட இயந்திரங்களுக்கு ஓய்வு வேண்டும் என்பதை
ஒத்துக்கொள்கின்றனர். தான் படைத்த மனிதன் உடலாலும்
உணர்வாலும் சோர்வடையக் கூடியவன் என்றும், அவ்வப்போது
அவனது உடலுக்கும் உணர்வுகளுக்கும் ஓய்வும்,
புத்துணர்ச்சியும் ஊட்டப்பட வேண்டும் என்றும்
அப்போதுதான் தனது தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்
மூலம் தான் வழங்கிய கட்டளைகளுக்கு இவன் சரிவர
கீழ்படிவான் என்றும் மனிதனைப் படைத்த அல்லாஹ்வுக்குத்
தெரியும்.
ரமலான் மாதத்தில் பள்ளிவாயில்கள் நிரம்பி வழியும்,
தர்ம காரியங்கள் நிறைய நடக்கும். சகோதரத்துவம்
வலுப்படும். ஆக்ரோஷங்கள் குறைந்து ஒருவித அமைதி
எங்கும் நிலவும். மனோதத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி
இவை யாவும் நோன்பினால் விளையக்கூடிய சமுதாய நலன்களில்
சில.
இந்த அருள் நிறைந்த மாத்தில் பழகிக் கொண்ட பண்புகளை
நாம் உறுதியுடன் நிலையாக கடைபிடிக்க வேண்டும். இந்த
மாதத்தில் எல்லோரையும் விட மிகவும் சுறுசுறுப்புடன்
திகழ்ந்த நம் அருமை நபி (ஸல்) அவர்களது முன்மாதிரியை
பின்பற்றுவதில் மீண்டும் நாம் சபதம் எடுத்துக்கொள்ள
வேண்டும்.
ஆனால், இன்று நிறைய முஸ்லிம்கள் இந்த நோன்பு காலத்தை
தங்களது சோம்பேறித்தனத்திற்கும், எல்லை மீறிய
தூக்கத்திற்கும், தங்களது கடமைகளிலிருந்து தவறி
பதுங்கிக் கொள்வதற்கும் பயன்படுத்திக் கொள்வதுதான்
மிகவும் வேதனையான உண்மை. ஓர் அலுவலகத்திற்கு சென்று
குறிப்பிட்ட பணியாளரை தேடினால் பிறகு வாருங்கள் அல்லது
நாளை வந்து பாருங்கள் என்ற பதில்தான் இந்த மாதத்தில்
பெரும்பாலும் கிடைக்கும். யாராவது ஒருவர்
பொறுமையிழந்து கோபமுடன் காணப்பட்டால் அவர் நோன்பு
நோற்றிருக்கிறார் அதுதான் இப்படி என்று பிறர் சொல்ல
கேட்க வேண்டியிருக்கும். ஆனால் இந்த நோன்பு என்பதே
அந்த மனிதனை சுய ஒழுக்கத்தை அவனுக்கு கற்றுக்
கொடுப்பதற்காக உள்ளதுதான் என்பதை நாம் மறந்து
விடுகிறோம். நோன்பு என்பது எல்லாவித நற்பண்புகளையும்
உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஒருவன் நோன்பு
வைத்துக்கொண்டே பிறரிடம் கடுமையாகவோ அல்லது அவருக்கு
தொல்லைக் கொடுக்கும் வண்ணமோ நடந்துக் கொள்ளக் கூடாது
என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.
மக்கள் தொடர்பில் உள்ள ஊழியர்கள் மக்களின் தேவைகளையும்
உரிமைகளையும் தாமதப்படுத்துவதற்குரிய மாதமாக இந்த
மாதத்தை எண்ணி செயல்பட்டு விடக்கூடாது. இஸ்லாமிய
மார்க்கத்தின் உயரிய கருத்துக்களை படித்து தெரிந்துக்
கொள்ள இந்த மாதம் சிறப்பான தருணமாகும் என்பதை
மாணவர்கள் தாங்களே உணரவேண்டும் அல்லது பெற்றோர்கள்
அவர்களுக்கு உணர்த்த வேண்டும். இலக்கின்றி ஊர்
சுற்றுவதிலும், பகல் முழுதும் தூங்கி இரவு முழுதும்
வீண் பேச்சுக்களிலும், தொலைக்காட்சிகளிலும் இந்த அருள்
நிறைந்த மாதத்தை பாழாக்கி விடக்கூடாது. ரமலான்
மாதத்தின் சிறப்புக்களை மீடியாக்களும், சமூகமும்
உணர்ந்து செயல்பட வேண்டிய நேரம் இதுதான். இரவை பகலாக
மாற்றுவதினால் நோன்பின் அர்த்தமே சிதைந்து
போய்விடுகிறது என்பதை இவர்கள் உணர வேண்டும்.
இஸ்லாத்தின் வழிகாட்டல்களை புறக்கணித்ததால் வந்த
விளைவுகள்தான் இவை. உண்மையில் சொல்லப்போனால்,
முஸ்லிம்களாகிய நாம் சரியான பாதையில்தான் செல்கிறோமா?
என்று நம்மை நாமே கேள்விகேட்டு சுயபரிசோதனை செய்து
பார்க்க வேண்டிய நாட்கள் இவை. இதற்கு ஒளிவு
மறைவில்லாமல் கிடைக்கிற பதிலிலிருந்து நாம் இஸ்லாம்
காட்டிய வழிகாட்டல்களிலிருந்து எவ்வளவு தொலைதூரத்தில்
இருக்கிறோம் என்பது தெளிவாக தெரிந்துவிடும்.
இன்று நாம் சந்தித்து வரும் பிரச்சினைகளில்
பெரும்பாலானவை நாமே தேடிக்கொண்டவைதாம் என்பதை வெளியில்
சொல்ல நமக்கு தைரியம் வேண்டும். முஸ்லிம்
உம்மத்தினர்களை இன்று சூழ்ந்துள்ள
பிரச்சினைகளிலிருந்து நம்மை விடுவிக்கும் முதல்
விடியலே நம்முடைய தவறுகளை நாம் ஒத்துக்கொள்வதுதான்.
நம்முடைய இன்றைய கஷ்டங்களிலிருந்து நம்மை விடுவிக்கும்
ஒரே தீர்வு எது தெரியுமா? முஸ்லிம்களாகிய நாம் திருமறை
குர்ஆனை பொருளுணர்ந்து படிப்பதிலும், அல்லாஹ்வின்
தூதர் நபி (ஸல்) அவர்களது வழிகாட்டல்களை அதன் தூய
வடிவில் ஒன்று விடாமல் விளங்கி பின்பற்றுவதிலும்தான்
அந்த தீர்வு இருக்கிறது. இதை நாம் செய்யும் பொழுது,
நமது கஷ்டங்களுக்கு பிறரது சூழ்ச்சிகள்தான் காரணம்
என்ற அர்த்தமற்ற பயம் மறைந்து விடும்.
குர்ஆன் சொல்கிறது: 'தங்களைத் தாங்களே மாற்றிக்
கொள்ளாத சமுதாயத்திற்கு எந்த மாற்றத்தையும் அல்லாஹ்
நிச்சயமாக ஏற்படுத்த மாட்டான்'. நம்மை அழிக்கும்
சூழ்ச்சிகளை நமது எதிரிகள் உருவாக்கவில்லை. நாம் தான்
நம்மையும் அறியாமல் நமது முரண்பாடுமிக்க செயல்களினால்
உருவாக்கிக் கொள்கிறோம்.
ஆகவே, நம்முடைய தேக்கநிலைக்கும், குறைபாடுகளுக்கும்
பிறரை காரணம் காட்டும் பழக்கத்திற்கு இன்றே நாம்
முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நம்மிடம் உலக
சூழு;நிலைகளுக்கு ஏற்ப துரிதகதியில் திட்டமிடுதலில்
இருக்கும் மந்தநிலையும், பிரச்சினைகளை அனுகுவதில்
பழமையான முறைகளை கையாளும் தன்மையும் இருக்கும்
வரையில்தான் நமது கற்பனையான மற்றும் நிஜமான எதிரிகளால்
நமக்கு தீங்கு ஏற்படும். இங்கு என்ன உடனடி தேவையெனில்
சுயபரிசோதனை மற்றும் வித்தியாசமாக சிந்தித்து
வித்தியாசமாக செயலாற்றும் தயார் நிலைதான்.
இன்றைய தினத்திலும், இனி வரும் நாட்களிலும் ஒரு
விஷயத்தை நாம் நன்றாக மனதில் நிலை நிறுத்திக் கொள்ள
வேண்டும். அதாவது நமது மார்க்கம் நான், எனது குடும்பம்
என்ற குறுகிய வட்டத்தை விட்டு உலகளாவிய இஸ்லாமியர்கள்
மற்றும் ஏனைய சமுதாயத்தினர் ஆகியோர் மீது அக்கறைக்
கொண்ட ஒன்றாக மனதளவிலாவது நாம் மாற்றம் கொள்ள
வேண்டும்.
நாம் வாழும் இன்றைய உலகம் விஞ்ஞான யுகத்தின்
தாக்கத்தினால் ஒரு கிராமமாக குறுகி விட்ட நிலையில்
தாராளமயமாக்கப்பட்ட தொழில்துறை மற்றும் பொருளாதார
கொள்கைகளின் சூழ்ச்சி வலைகளில் சிக்கி ஏராளமான மக்கள்
அர்த்தமற்ற போர்களுக்கும், அகோர பஞ்சத்திற்கும்,
மருந்தே இல்லாத வியாதிகளுக்கும்,
இனப்படுகொலைகளுக்கும், உள்நாட்டு சண்டைகளுக்கும், மனித
உரிமை மீறல்களுக்கும் இரையாகிக்
கொண்டிருக்கின்றார்கள்.
இராக்கில் நிலவும் அசாத்தியமான சூழ்நிலை அங்குள்ள
கட்டுபாடற்ற நிலைமையைக் காட்டுகிறது. ஆப்கானிஸ்தானிலோ,
மேலோட்டமாக பார்க்கும்போது எல்லாம் அமைதியாக
இருப்பதுபோல் தெரிந்தாலும், உண்மையில் அமைதியான
சூழ்நிலைக்கு எவ்வளவோ தூரத்தில்தான் ஆப்கானிஸ்தான்
இருக்கிறது. பாலஸ்தீன மக்களோ தங்களது துயரமான
வரலாற்றின் மிகவும் மோசமான அத்தியாயத்தில் வாழ்ந்துக்
கொண்டிருக்கிறார்கள். சாதாரண மனித உயிருக்கு
கொடுக்கப்படும் உரிமைக்கூட பாலஸ்தீன மக்களுக்கு இன்று
மறுக்கப்பட்டு வருவதை கண்கூடாகப் பார்க்கிறோம்.
செச்சனியா ரொம்பவும் கொந்தளிப்பான சூழ்நிலையில்
இன்னும் இருக்கிறது, சமீபத்திய தேர்தல்களின் மூலம்
அங்கு அமைதி திரும்பும் என்று நம்புவோம். இந்தியத்
துணைக்கண்டத்தில் உருவாகி வரும் நெருக்கடியான நிலைமை
உலகம் முழுவதையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது, காரணம்
எதிரும், புதிருமாக வரிந்துக்கட்டிக் கொண்டு நிற்கிற
இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுமே அணு ஆயுத
பலம் படைத்திருப்பதுதான். அனைத்துலகிற்கும் அமைதியும்,
பாதுகாப்பும் ஏற்பட நாம் பிரார்த்திப்போம்.
தங்களது மதநம்பிக்கை, தொழில் காரணமாகவும், அவ்வளவு ஏன்
தங்களையும் அறியாமல் பிறரது எல்லைக்கோட்டிற்கு அப்பால்
வசிக்க வேண்டிய நிர்பந்தம் காரணமாகவும் அல்லது அரசியல்
பொருளாதார ஆதாயங்களுக்காக தங்களது அதிகாரத்தை
துஷ்பிரயோகம் செய்யும் அநியாயக்கார அரசியல்வாதிகள்
மற்றும் பணமுதலைகளின் பகடைக்காய்களாக நசுக்கப்படுகிற
எளிய மக்களுக்காக நம் உள்ளங்கள் நெகிழ்கின்றன.
அமெரிக்கா, சவூதி அரேபியா, மொராக்கோ, பாலி மற்றும்
உலகின் பிற பகுதிகளிலும் நடத்தப்பட்ட பயங்கரவாத
தாக்குதலில் தங்களது சொந்த பந்தங்களை இழந்த
குடும்பத்தினர் ஆறுதலும், தைரியமும் அடையட்டும். ஆனால்
பயங்கரவாதத்தின் கோரப்பிடியில் சிக்கி
உயிரிழந்தவர்களுக்காக நாம் வெறுமனே பிரார்த்தித்து
விட்டால் மட்டும் போதாது. பயங்கரவாதத்தை வேறோடு
அழித்து இந்த பூமியை அமைதிப் பூங்காவாக மாற்றுவதற்கு
நாம் அனைவரும் உறுதியுடன் சபதமேற்க வேண்டும். நாம்
சொல்லும் சின்னதொரு வார்த்தையோ அல்லது செய்யும்
சிறியதொரு செயலோ கூட பயங்கரவாதத்தை ஊக்கப்படுத்துவதாக
அமைந்துவிடக் கூடாது என்பதில் நாம் கண்ணும் கருத்துமாக
இருக்க வேண்டும். நம் குழந்தைகளுக்கு
சகிப்புத்தன்மையையும், பிற மனித உயிர்களை மதிக்கும்
பண்பையும் ஊட்டி வளர்க்க வேண்டும். நம்மில் பலர் வளமான
நாடுகளில் வசதிமிக்க சமூகங்களில் வசிக்கலாம் அவர்கள்
வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைக்கூட பெற்றிராத
எண்ணற்ற மக்கள் இந்த உலகில் வசித்துக்
கொண்டிருக்கிறார்கள் என்பதை ஒருபோதும் மறந்து
விடக்கூடாது.
இந்த ரமலானை முன்னிட்டு உலக முஸ்லிம்கள் அனைவரும்
நோன்பு, தொழுகை, ஜகாத், சதகா போன்ற நற்காரியங்களை
அதிகமதிகம் செய்வதன் மூலம் தங்களுக்குள் நெருக்கத்தை
ஏற்படுத்துவதுடன் அல்லாஹ் ரப்புல் ஆலமீனையும் நெருங்க
வேண்டும் என்று முழு மனதுடன் மிகுந்த ஈடுபாடு கொள்ள
வேண்டும். மேலும் கடின உழைப்பின் மூலம் இவ்வுலகை
நமக்கும் நம் சந்ததியினருக்கும் நல்ல வாழுமிடமாக
மாற்றி அமைப்போம். நம் சகோதரர்கள், நம் குடும்பத்தினர்
மற்றும் நம் சமுதாயத்தினருடன் சேர்ந்து நமது கடமையை
நாம் சரிவர செய்யும் அதே வேளையில் அல்லாஹ்வின்
தூதர்களான இப்ராஹீமும், இஸ்மாயீலும் அல்லாஹ்வுடைய
இல்லமான புனித கஅபா ஆலயத்தை நிர்மாணம் செய்யும் போது
பிரார்த்தித்தது போன்று நாமும் பிராத்திப்போமாக:
2:128. ''எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை
முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக, எங்கள்
சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு
கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை)ஆக்கி வைப்பாயாக,
நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக,
எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை)
மன்னிப்பாயாக, நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும்,
அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.''
இறுதியாக இன்னும் ஒரே ஒரு பிரார்த்தனை மட்டும் நாம்
செய்ய வேண்டும் என்றால் அது இந்த உலகின் எந்த மூலையில்
உள்ள குழந்தையின் கண்களிலும் பயம் என்பதே இருக்கக்
கூடாது என்பதுதான். அது எந்த பயம் தெரியுமா? அந்த
குழந்தை தனது பெற்றோர்களை இழக்கும் பயம், தனது வீடு
இடித்துத் தள்ளப்படும் பயம், மனித நேயமே மறத்து
போய்விட்ட மனிதர்கள் சக மனிதர்கள் மீது கட்டவிழ்த்து
விடும் அழிச்சாட்டியங்களினால் அன்றாடம் ஏற்படுகின்ற
பயம்.
நீதியை நிலைநாட்டுவதற்காக நடத்தப்பட்ட முக்கிய
இஸ்லாமிய போர்கள் அனைத்துமே ரமலான் மாதத்தில்தான்
நடத்தப்பட்டு வெற்றிவாகையும் சூடப்பட்டது என்பதை நாம்
தெரிந்து வைத்திருக்கிறோம். அதுபோலவே இந்த ரமலானிலும்
நாம் வென்றெடுக்க வேண்டிய போர்களங்கள் சில உள்ளன, அவை:
வறுமை, சகிப்புத்தன்மையில்லாமை, அநீதி, நிறவெறி
மற்றும் பயங்கரவாதம் ஆகியவையாகும்.
|