www.idhuthanislam.com

கனவில் வராத நபி(ஸல்) அவர்கள்

ஜி என்

 

ஒரு மனிதர் இறை நேசராக ஆகுவதற்குரிய அடையாளங்களில் ஒன்று நபி(ஸல்) அவர்களைக் கனவில் காண்பதாகும் என்று முஸ்லிம்களில் பலர் நினைத்துக் கொண்டிக்கிறார்கள். சில புத்தங்களில் கூட இந்தக் கருத்தை எழுதியும் வைத்துள்ளார்கள்.

ஒரு மனிதர் 'நான் நபி(ஸல்) அவர்களை கனவில் கண்டேன்' என்று கூறினால் அவரை சுற்றியுள்ளவர்களுக்கு மத்தியில் அவர்மீது மதிப்பும் மரியாதையும் அந்தஸ்தும் கூட கூடுகிறது. அவர் சொல்வதெல்லாம் மார்க்கம் என்று கூட முஸ்லிம்களில் பலர் எண்ணிக் கொள்கிறார்கள்.

நபி(ஸல்) அவர்கள் மீது தங்கள் உயிரை விட அதிக மதிப்பு வைத்திருக்கும் முஸ்லிம்கள், நபி(ஸல்) அவர்களை காண முடியாததை பெரும் இழப்பாகவே கருதி வருகிறார்கள். இந் நிலையில் நபி(ஸல்) அவர்களைக் கண்ட ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பதென்பது அவர்களைப் பொருத்தவரை பெரும் மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். இதனால் கூட நபியை கனவில் கண்டதாக கூறும் நபரின் அந்தஸ்து கூடுகிறது.

நபியை நேரில் காண்பதாலோ அல்லது கனவில் காண்பதாலோ ஒருவருக்கு மார்க்க ரீதியாக எத்தகைய பலனும் ஏற்படப் போவதில்லை. நபி(ஸல்) அவர்கள் உயிரோடு இருந்த போது நேரில் பார்த்த எத்துனையோ பேர் ஈமான் கொள்ளவில்லை. நேரில் பார்த்து ஈமான் கொண்டவர்களில் சிலர் கூட அவ்வப்போது சந்தர்ப்பவாதிகளாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டது. இதுவெல்லாம் வரலாற்று உண்மை. எனவே ஒருவர் நபியைக் காண்பதால் அவரிடம் இறைநம்பிக்கை மற்றும் கொள்கை ரீதியாக எத்தகைய முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பிரத்யேகமாக முஹம்மத்(ஸல்) அவர்களை கனவில் காண்பது பற்றி முஸ்லிம்களிடம் ஒரு உணர்ச்சிப் பூர்மான மனநிலை நீடிப்பதற்கு காரணம் கீழே இடம் பெறும் ஹதீஸ்களேயாகும்.

என்னை யார் கனவில் கண்டாரோ அவர் என்னையேக் கண்டார் என் வடிவில் ஷைத்தான் வரமாட்டான் என்பது நபிமொழி (அபூஹூரைரா(ரலி) புகாரி – முஸ்லிம் - திர்மிதி)

இந்தக் கருத்தை வலியுறுத்தி வார்த்தை மாறாமல் புகாரியில் ஏராளமான இடங்களில் இந்த செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஹதீஸில் என்னைக் கனவில் கண்டவர் என்னையேக் கண்டார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் 'ஒருவர் ஒரு கனவுக் காண்கிறார். அதில் ஒரு மனிதர் வருகிறார் நான் தான் முஹம்மத் இறைவனின் தூதர்' என்றுக் கூறுகிறார். சில கட்டளைகளை இடுகிறார் (மதினாவில் கனவுக் கண்டு வினியோகிக்கப்பட்ட நோட்டீஸ்கள் இதற்கு உதாரணம்) கனவில் வந்தவர் தன்னை இறைத்தூதர் என்று அறிவித்து விட்டதால் கனவுக் காண்பவர் ஏகத்துக்கும் அக மகிழ்ந்து கனவின் கட்டளையை சிரம்மேல் கொண்டு செயல்படுத்த முனைவதோடு இறைத்தூதரைக் காணும் பாக்கியம் கிடைத்து விட்டதால் தன்னை மதிப்பிற்குரியராகவும் கருதத் துவங்கி விடுகிறார். தனக்கு வந்த ஒரு கனவை ஆதாரமாக் கொண்டு அதன் பின்னர் மார்க்கக் காரியங்களில் மனதில் தோன்றியதையெல்லாம் செய்ய துணிந்து விடுகிறார்.

இதற்காக அவர் எடுத்து வைக்கும் வாதம் 'நான் இறைத்தூதரைக் கனவில் கண்டேன். வந்தது இறைத்தூதர் தான் ஏனெனில் 'என் வடிவில் ஷெய்த்தான் வர மாட்டான்' என்று அவர்களே கூறியுள்ளதால் கனவில் வந்தது நபி(ஸல்) அவர்கள் தான்.' என்பதுதான்.

கனவில் மார்க்கக் காரியங்களோ – கட்டளைகளோ வர முடியாது என்பதை நாம் ஏற்கனவே 'வண்ண வண்ணக் கனவுகள்' கட்டுரையில் தக்க ஆதாரங்களுடனும் தகுந்த வாதங்களுடனும் விளக்கியுள்ளோம். இறைவனால் முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கத்தில் நபி(ஸல்) கனவில் வந்து மார்க்க விஷயங்களை அறிவிப்பதாக நம்புவது அவர்களின் தூதுத்துவப் பணிக்கே இழுக்கு என்பதை நாம் முதலில் விளங்க வேண்டும்.

அப்படியானால் கனவில் நபி(ஸல்) அவர்கள் வருகிறார்கள். சில காரியங்களைச் சொல்கிறார்கள் என்பதன் நிலவரம் தான் என்ன?

முதலில் நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸ்கள் என்ன சொல்கிறது என்பதை விளங்குவோம்.

குறிப்பிட்ட ஹதீஸில் 'என் வடிவில் ஷெய்த்தான் வராட்டான்' என்று நபி(ஸல்) கூறுகிறார்கள். 'என் வடிவில்' என்பதில் தனது வடிவத்தை நபி(ஸல்) பிரதானப்படுத்தியுள்ளதால் அவர்களின் வடிவில் ஷெய்த்தான் வர முடியாது என்பது தான் உண்மையே தவிர வேறு வடிவத்தில் வந்து அவர்களின் பெயரைப் பயன்படுத்துவதற்கு தடையில்லை. தடுக்கப்பட்டுள்ளது முஹம்மத்(ஸல்) அவர்களின் வடிவம் தானே தவிர அவர்களின் பெயரல்ல.

கனவில் வரக் கூடிய ஷெய்த்தான், மக்கள் நபி(ஸல்) அவர்களைப் பற்றி கற்பனை செய்து வைத்துள்ள வடிவில் வந்து 'நான் தான் முஹம்மத்' என்று சொல்லுவதற்கு தங்கு தடையின்றி வாய்ப்பு உண்டு. முஹம்மத்(ஸல்) அவர்களை கனவில் கண்டதாகக் கூறுபவர்களிடம் 'அவர்கள் எப்படி இருந்தார்கள்' என்று ஒரு கேள்வியைக் கேட்டால் அவர்கள் வர்ணிக்கும் வர்ணனைக்கும் நபி(ஸல்) அவர்களின் உருவ அமைப்புப் பற்றி வரும் அறிவிப்புகளுக்கும் கொஞ்சமும் சம்பந்தமிருக்காது.

நபி(ஸல்) கனவில் வந்தார்கள் என்பது உண்மையல்ல என்பதற்கு இதுவே போதுமான வாதம் என்றாலும் 'தன் உருவில் ஷெய்த்தான் வரமாட்டான்' என்று சொன்ன நபி(ஸல்) இது பற்றி கூடுதலாக விளக்கியுள்ளதையும் இங்கு எடுத்துக் காட்டுவோம்.

'யார் என்னைக் கனவில் கண்டாரோ அவர் விழிப்பிலும் என்னைக் காண்பார் என் வடிவில் ஷெய்த்தான் வரமாட்டான் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (அபூஹூரைரா (ரலி) புகாரி – முஸ்லிம்)

கனவில் என்னைக் காண்பவர் விழிப்பிலும் என்னைக் காண்பார் என்பது ஒரு முன்னறிவிப்பாகும்.

நபி(ஸல்) அவர்களை அவர்கள் உயிரோடு இருக்கும் போது காணக் கூடிய வாய்ப்பைப் பெற்றவர்கள் அல்லது காணும் வாய்ப்பைப் பெறுபவர்கள் இவர்களுக்கான முன்னறிவிப்புதான் அது.

பொதுவாக எல்லா காலக்கட்டத்திலும் நபி(ஸல்) அவர்களைக் கணவில் காண முடியும் என்று யாராவது வாதிட்டால் 'அவர் என்னை நேரிலும் கண்பார்' என்று நபி(ஸல்) சொன்னதை அவர் பொய் படுத்தி விடுகிறார் என்ற நிலைதான் உருவாகும்.

'அவர் விழிப்பிலும் (நேரிலும்) என்னைக் காண்பார்' என்ற அறிவிப்பிலிருந்து நேரில் காணும் வாய்ப்பில்லாத எவரும் நபி(ஸல்) அவர்களைக் கனவில் காண முடியாது என்பதை தெளிவாக விளங்கலாம்.

எனவே இன்றைக்கு யாரும் நபி(ஸல்) அவர்களைக் கனவில் காண முடியாது. யாராவது கனவில் கண்டதாகக் கூறினால் நபி(ஸல்) அவர்கள் பெயரைப் பயன்படுத்தி ஷெய்த்தான் அவரிடம் விளையாடியுள்ளான் என்பதை சட்டென்று புரிந்துக் கொள்ள வேண்டும். அதை அவருக்கு விளக்கவும் வேண்டும்.

நபி(ஸல்) கனவில் வந்து 'நீ இஸ்லாத்தைத் தழுவு' என்று சொல்வதெல்லாம் இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணானதாகும். இஸ்லாம் என்பது உலக மக்களுக்கென்று ஒரு கொள்கையை முன் வைத்துள்ளது. அந்தக் கொள்கைப் பற்றி விவாதிக்கச் சொல்கிறது - விளக்கம் பெறச் சொல்கிறது. அது சரி என்று விளங்கும் பட்சத்தில் அதை ஏற்று முஸ்லிமாக சொல்கிறது. ஒருவரின் தோற்றமோ அவர் இடும் கட்டளையோ இஸ்லாத்தைத் தீர்மானிக்கும் அளவுகோளல்ல.

(நபியே!) உம் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய கிருபையும் இல்லாதிருந்தால், அவர்களில் ஒரு கூட்டத்தார் உம்மை வழி தவறி நடக்கும்படி செய்ய முயன்றிருப்பார்கள்;. ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி தவறும்படி செய்ய முடியாது. இன்னும் அவர்களால் உமக்கு எந்த விதமான தீங்கும் செய்துவிட முடியாது. மேலும் அல்லாஹ் உம் மீது வேதத்தையும் ஞானத்தையும் இறக்கியுள்ளான்;. நீர் அறியாதிருந்தவற்றையும் அவன் உமக்குக் கற்றுக் கொடுத்தான். (அல் குர்ஆன் 4:113)

எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும்; (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்;. அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும் (அல் குர்ஆன் 4:115)


இந்த இரண்டு வசனங்களையும் படித்து சிந்தியுங்கள். இறை நம்பிக்கை என்பது இறை அருளால் அவன் கற்றுக் கொடுக்கும் கல்வியால் ஏற்படுவதாகும் என்பதை இந்த வசனங்கள் சுட்டிக் காட்டுகிறது. முதலாவது வசனத்தில் 'நபியே.. நீர் அறியாமலிருந்தவற்றை அவன் கற்றுக் கொடுத்தான்' என்கிறான். இரண்டாவது வசனத்தில் 'நேர்வழி இன்னதென்று தெளிவாக தெரிந்தப் பின்னர்..' என்கிறான். நேர்வழிப் பெற வேண்டுமானால் அதன் கொள்கையைக் கற்க வேண்டும் என்பது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

கனவில் வந்து 'இஸ்லாத்தை ஏற்றுக் கொள்' என்று கூறுவதெல்லாம் ஒரு கொள்கையை விளக்கும் முறையோ - அழகோ கிடையாது. இஸ்லாம் அதை விரும்பவும் இல்லை.

நபி(ஸல்) கனவில் வந்து கட்டளையிட்டார்கள், இஸ்லாத்தை ஏற்கும் படி கூறினார்கள் என்று எடுத்து வைக்கும் இதே வாதங்கள் கிறிஸ்த்தவர்களிடமும் இருக்கிறது. கிறிஸ்த்துவத்தை தழுவுபவர்களில் கனிசமானவர்கள் 'ஏசுவை நான் கனவில் கண்டேன். அவர் தான் என்னை கிறிஸ்த்துவத்திற்கு வரும்படி கூறினார்' என்றே கூறுகிறார்கள். இஸ்லாத்தை போதிக்க வந்த ஈஸா(அலை) (இயேசு) இஸ்லாத்திற்கு எதிரான கொள்கையின் பக்கம் யாரையும் அழைப்பார்களா.. ஆனால் அந்த மக்கள் 'கனவில் வந்தது இயேசு தான்' என்று நம்புகிறார்கள். இது போன்ற கொள்கையற்ற நம்பிக்கைகள் இஸ்லாத்தில் தனது பெயரால் வந்து விடக் கூடாது என்பதால் தான் 'என்னைக் கனவில் காண்பவர் விழிப்பிலும் என்னைக் காண்பார்' என்று முன்னறிவிப்பு செய்து வெறும் கனவை ஆதாரமாகக் கொள்ள வேண்டாம் என்பதை அறிவுறுத்திச் சென்றுள்ளார்கள். எனவே நபி(ஸல்) கனவில் வருவார்கள் என்று நம்புவது ஆதாரமற்ற வெறும் யூகமேயாகும்.
 
Name: M.Mohamed Abbas
email: nassman85@yahoo.co.in
Location: chennai
Subject: Vimarsanam

அஸ்ஸலாமு அலைக்கும்
///\'யார் என்னைக் கனவில் கண்டாரோ அவர் விழிப்பிலும் என்னைக் காண்பார் என் வடிவில் ஷெய்த்தான் வரமாட்டான் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (அபூஹூரைரா (ரலி) புகாரி – முஸ்லிம்)

கனவில் என்னைக் காண்பவர் விழிப்பிலும் என்னைக் காண்பார் என்பது ஒரு முன்னறிவிப்பாகும்.

நபி(ஸல்) அவர்களை அவர்கள் உயிரோடு இருக்கும் போது காணக் கூடிய வாய்ப்பைப் பெற்றவர்கள் அல்லது காணும் வாய்ப்பைப் பெறுபவர்கள் இவர்களுக்கான முன்னறிவிப்புதான் அது.

பொதுவாக எல்லா காலக்கட்டத்திலும் நபி(ஸல்) அவர்களைக் கணவில் காண முடியும் என்று யாராவது வாதிட்டால் \'அவர் என்னை நேரிலும் கண்பார்\' என்று நபி(ஸல்) சொன்னதை அவர் பொய் படுத்தி விடுகிறார் என்ற நிலைதான் உருவாகும்.

\'அவர் விழிப்பிலும் (நேரிலும்) என்னைக் காண்பார்\' என்ற அறிவிப்பிலிருந்து நேரில் காணும் வாய்ப்பில்லாத எவரும் நபி(ஸல்) அவர்களைக் கனவில் காண முடியாது என்பதை தெளிவாக விளங்கலாம்.

எனவே இன்றைக்கு யாரும் நபி(ஸல்) அவர்களைக் கனவில் காண முடியாது. யாராவது கனவில் கண்டதாகக் கூறினால் நபி(ஸல்) அவர்கள் பெயரைப் பயன்படுத்தி ஷெய்த்தான் அவரிடம் விளையாடியுள்ளான் என்பதை சட்டென்று புரிந்துக் கொள்ள வேண்டும். அதை அவருக்கு விளக்கவும் வேண்டும்.///

உங்கள் கருத்து படி நபி(ஸல்) அவர்கள் இறந்த பிறகு நபி(ஸல்) அவர்கள் யார் கனவிலும் நபி(ஸல்) வரவில்லை... நபி(ஸல்) அவர்கள் சகாபாக்களுடன் இருந்த காலத்தில் மட்டும் தான் கனவில் வந்தார்கள். அதற்கு பிறகு யார் கனவிலும் வரவில்லை.அப்படி வந்தால் விழிப்பிலும் என்னை கான்பார்...அப்படி நபி(ஸல்) அவ்ர்கள் இறந்த பிறகு யாரவது அவரை கனவில் கான்பார்களாயினால் அவர் பொய்யர் என்பது உங்கள் கருத்து படி..

நீங்கள் சொல்லுவது தான் தவறு,
ஆதாரம் உமர்(ரலி) அவர்களின் வாழ்கை வரலாறு படியுங்கள்... பிறகு நபி(ஸல்) அவர்கள் இன்னும் உயோரோடு தான் இருக்கிறார்கள் என்பதையும் விளங்கி கொள்ளலாம்...ஆதாரம் நீங்களே அறிவித்து விட்டீர்கள் ,அப்படி என்னை கண்டால் விழிப்பிலும் என்னை கான்பார்... இங்கு இந்த சகாபி காண்பது மட்டும் அல்லாமல் அதன் படி அமல் செய்தார்கள் ...அதன் படி பஞ்சமும் நீங்கியது.....
..........

மக்களே.., உங்களது ஆட்சியாளரின் கவனக் குறைவு காரணமாக இந்த தண்டனை இறங்கியிருக்கின்றதா அல்லது மக்களின் பாவங்களின் காரமணாக இந்த வேதனையை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோமா என்பது தெரியவில்லை. பாவத்தைச் சுமக்கின்றவர்கள் அனைவரும் இறைவனிடம் பிராயச்சித்தம் தேடிக் கொள்ளுங்கள், இந்த கடுமையான சூழ்நிலையிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்படி இறைவனிடம் மன்றாடிக் கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்.

பிலால் பின் ஹாரிஸ் என்ற பனூ மஸ்னி கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் ஒரு ஆட்டை அறுத்தார், அறுத்த அந்த ஆட்டில் எலும்பைத் தவிர வேறொன்றுமில்லை என்ற அளவுக்கு அங்கே பஞ்சம் தலைவிரித்தாடியது. அன்றைய இரவில் அவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களைக் கனவில் கண்டார். அந்தக் கனவில்..,

உமரிடம் சென்று எனது இந்தச் செய்தியைத் தெரிவித்து விடுங்கள். மார்க்கத்தில் அவரை உறுதியாக இருக்கின்றார். இந்த சோதனையை விட்டும் விலகிக் கொள்வதற்கு மேலும் மார்க்கத்தில் உறுதியாக இருக்கும்படி அவரிடம் கூறுங்கள் என்று அந்தக் கனவில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிலால் பின் ஹாரிஸ் (ரலி) அவர்களிடம் கூறினார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தெரிவித்த இந்த செய்தியை உமர் (ரலி) அவர்களிடம் பிலால் பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் தெரிவித்து விடுகின்றார்கள். இந்தச் செய்தியின் மூலமாக கிடைக்கின்ற படிப்பினை என்ன என்பதனை உமர் (ரலி) அவர்களால் சரியாக ஊகித்துக் கொள்ள முடியவில்லை. ஒருவேளை தன்னிடம் ஏதேனும் பொடுபோக்குத் தனங்கள் இருப்பதாக இறைத்தூதர்(ஸல்) அவர்களின் இந்தச் செய்தி தெரிவிக்கின்றதோ என்றும் கருதலானார்கள். இறையச்சத்தின் காரணமாக அவரது உடல் நடுங்கிற்று. பள்ளிவாசலுக்குச் சென்ற உமர் (ரலி) அவர்கள், தன்னிடம் ஏதேனும் குறைகள் காணப்படுகின்றனவா என்று மக்களிடம் விசாரிக்க ஆரம்பித்தார்கள். உங்களிடம் எந்த பலவீனங்களும் காணப்படுவதாக எங்களால் அறிய முடியவில்லை என்று மக்கள் கூறலனார்கள்.

பின்னர், மக்கள் ஒன்று சேர்ந்து.., உமரே.., இந்தக் கேள்வியை எங்களை நோக்கி வீசக் காரணம் என்ன? என்று கேட்டார்கள். அதற்கான அவசியம் என்ன வந்து விட்டது உங்களுக்கு என்றார்கள். அதன் பின்னர் பிலால் பின் ஹாரிஸ் (ரலி) அவர்களை அழைத்த உமர் (ரலி) அவர்கள், அந்த கனவை மக்களுக்கு விளக்கப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்கள். பிலால் (ரலி) அவர்கள் அந்தக் கனவைக் கூறி முடித்தவுடன், அங்கிருந்த நபித் தோழர் ஒருவர் எழுந்திருந்து, அமீருல் முஃமினீன் அவர்களே.., இந்தச் செய்தியில் உங்களுக்கு எதிராக எதுவும் காணப்படவில்லை. நம்மைச் சுற்றி இருக்கின்ற இந்த பஞ்சம் நம்மை விட்டு அகல்வதற்காக இஸ்திஸ்கா என்ற மழைத் தொழுகையைத் தொழும்படித் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நம்மை அறிவுறுத்தி இருக்கின்றார்கள் என்று விளக்கமளித்தார்.

அதன் பின்னர் உமர் (ரலி) அவர்கள் ஒருநாளை நிர்ணயித்து, அந்த நாளில் மழைத் தொழுகை தொழப்படும் என்று அறிவிப்புக் கொடுத்தார்கள். அன்றைய நாளில் முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்கள் எங்கும் சிறப்பான மழைத் தொழுகையை தொழ வேண்டும் என்ற உத்தரவையே உமர் (ரலி) அவர்கள் வழங்கினார்கள். மதீனாவில் முஸ்லிம்கள் மழைத் தொழுகைக்கான ஒன்று கூடினார்கள். அன்று நடந்த தொழுகையில் உரையாற்றிய உமர் (ரலி) அவர்கள் :

நாம் பாவங்கள் செய்தவர்களாகி விட்டோம். நம்முடைய பாவங்களுக்கு பிராயச்சித்தமாக இறைவனிடம் பாவ மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுங்கள். யா அல்லாஹ்..! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம்.., உன்னிடமே உதவி கோருகின்றோம். யா அல்லாஹ் எங்களது பாவங்களை மன்னிப்பாயாக.., எங்கள் மீது கருணை காட்டுவாயாக, எங்கள் மீது இரக்கம் காட்டுவாயாக..!

இவ்வாறாக மழைத் தொழுகை நடத்தி முடிக்கப்பட்டதன் பின், ஒரு வார காலத்திற்குள் மதீனாவின் வான் பரப்பில் மேகங்கள் சூழத் துவங்கின. கன மழை பொழிந்தது. இதன் பின்னர், உமர் (ரலி) அவர்கள் இறைவனுக்கு நன்றி செலுத்துமுகமாக சிறப்புத் தொழுகையையும் நடத்தினார்கள். மழைக்குப் பின்னர் நிலைமைகள் முற்றிலும் மாறியது, பஞ்சம் நீங்கியது. மிகவும் கடுமையானதொரு சூழ்நிலையில் உமர் (ரலி) அவர்கள் மிகவும் சமர்த்தியமான முறையில் உமர் (ரலி) அவர்கள் ஆட்சியை நிர்வகித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

.........

இது தமிழ் இஸ்லாம்.காம் யிலிருந்து பதிவு செய்து உள்ளேன்......
இதில் பிலால் பின் ஹாரிஸ் அவர்கள் நபி(ஸல்) அவர்களை பார்த்தது மட்டும் இல்லாமல்,அதை உமர்(ரலி) அவர்களிடம் அறிவித்து விடுங்கள் என்றும் கூறி அதன் படி அமல் செய்தார்கள். அதன் படி மழையும் பொய்ததது.... அப்போது பிலால் பின் ஹாரிஸ்(ரலி) அவ்ர்கள் நபி(ஸல்) கனவிலும் கண்டதும் இல்லாமல் அவர்கள் விழித்து எழிந்திருக்கும் பார்த்து இருக்க வேண்டும்....அப்போது நபி(ஸல்) அவர்கள் உயோரோடு தான் இருக்கிறார்கள் என்பதையும் நாம் அறியலாம்... அதாரம் நீங்களே சமர்த்திருக்கிரீர்கள்
ஏனென்றால் பிலால் பின் ஹாரிஸ்(ரலி) விழித்திருக்கும் போதும் நபி(ஸல்) அவர்களை கண்டார்கள் திட்ட வட்டமாக நாம் அறிந்து கொள்ளலாம்...

அப்படி நீங்கள் மறுப்பு தெரிவிப்பர்களனால் அது உங்கள் மனதில் கரும் புள்ளி இருக்கும் என்பது சந்தேகமே இல்லை...உங்களுடைய சொந்த கருத்து கணிப்பு எனக்கு தேவை இல்லை.... என்னுடைய முன்னோர்கள் ,கண்ணியமிக்க இமாம்கள் அவர்களின் கருத்து கணிப்பு முக்கியம் இன்சா அல்லா நீங்கள் மறுத்தால் அவர்களின் கருத்து கணிப்பை பதிவு செய்கிறேன். இறுதியாக ஒரே ஒரு இமாம் களின் கருத்து கணிப்பு மட்டும் இப்போ பதிவு செய்கிறேன்..... நமக்கு எல்லோருக்கும் தெரிந்த இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் ..... அவர்களின் முன்னுரை படித்தவர்களுக்கு நன்கு தெரியும்...... இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் நான் முகம்மது(ஸல்) அவர்களை கனவில் கண்டேன் என்னை அவர்கள் ஸஹிஹ் வான ஹதிஸ் பதிவு செய் என்று சொன்னார்கள்...அதனால் எனக்கு ஒரு லட்சம் மேற்பட்ட ஹதிஸ் கிடைத்தது...எனக்கு அறிவுக்கு கொண்டு நான் ஹ்திஸ்களை தொகுத்தேன்.....இதன் மூலம் இனிமேல் சகோதரர்கள் இமாம் புகாரி(ரஹ்) அவ்ர்கள் பொய் சொல்லி விட்டார்(உங்கள் க்ருத்து படி) இனிமேல் அவர் அறிவிக்கும் ஹதிஸ் இனிமேல் இந்த இனைதள்த்தில் பதிவு செய்ய கூடாது...ஏனென்றால் பொய்யர்கள் கூற்றை பின்பற்றாதீர்கள்(அல் குரான் சுருக்கம்).... அதனால் நீங்கள் அறிவிக்கும் இந்த கட்டுரையில் இரண்டு ஹதிஸ்கள் நீக்கி விடுங்கள் இன்சா அல்லா இன்னும் பலர் இமாம்கள் இந்த ஹதிஸ்கள் சம்மந்தமாக கூறும் கருத்தை
வெளியிடுவேன்....ஏனென்றால் இதற்கு உங்களின் பதில் எதிர்முனைதான் வரும்...என்பது சந்தேகம் இல்லை..ஏனென்றால் ஒரு வெப்சைட் நடத்து பவர்கள்...தங்களின் வாதம் பொய் ஆக கூடாது என்று உங்களின் எதிர் கருத்தை வைப்பீர்கள் என்பது சந்தேகம் இல்லை

 ...இனசா அல்லா நானும் பல இமாம்களின் கருத்து கணிப்பு பதிவு செய்கிரேன்...அதில் என்னுடைய சுய கருத்துகள் எதுவும் இல்லை... பிறகு ஏதோ ஒரு நபர் தெளிவானல் அல்ஹம்தில்லாஹ்!

நீங்கள் உங்களின் வாதங்களை நாளை அந்த கண்ணியமிக்க இமாம் களிடம் வைத்து கொள்ளுங்கள்....ஏனென்றால் எனக்கு இது தான் உன்மை என்று எனக்கு தெரியாது..... அந்த நல்லோர்கள் சொல்லும் கருத்தை நான் நம்பு கிரேன்.... உங்களுடைய கருத்து எனக்கு தேவை இல்லை... அல்லா மிக்க அறிந்தவன்

 



 

தமிழ் இஸ்லாமிய செய்தி ஊடகத்தின் உலக வலை